The Color of Paradise (1999) (Rang-e khoda)
திரை முழுதும் இருள்.
“இது யாருடையது?”
பதில் இல்லை.
ஒரு டேப் ரெகார்டர் திறக்கப்படும் ஓசை. ஒரு கேஸட் ஓடத் துவங்குகிறது. ஒரு சிறுவனின் குரல் அதிலிருந்து ஒலிக்கிறது.
“இது என்னுடையது சார்”
தொடர்ந்து நான்கைந்து கேசட்டுகள். ஒவ்வொன்றும் இதே போன்று யாருடையது என்று அடையாளம் காணப்படுகிறது.
திரையில் ஒளி பரவுகிறது. அது பார்க்கும் திறனற்றவர்களுக்கான உறைவிடப்* பள்ளி.
அன்று பள்ளியின் கடைசி நாள். எல்லா மாணவர்களும் உற்சாகமாக கிளம்பத் தயாராகின்றனர். வீட்டிலிருந்து ஆட்கள் வந்து எல்லோரையும் அழைத்து செல்கிறார்கள். மிஞ்சிப் போவது பதினோரு வயது மொஹமத் மட்டுமே. அவனை அழைத்துப் போக அவன் அப்பா நெடு நேரமாக வரவில்லை.
எவ்வளவு நேரம் காத்திருக்க போகிறோம் என்று தெரியாமலே காத்திருக்கிறான். அவ்வப்போது அழுகிறான். ஒரு சின்னஞ்சிறு பறவையின் முனகல் சத்தம் கேட்கிறது. பிறந்து சில நாட்களே ஆன பறவை போல அதன் குரலில் ஒரு பலவீனம். மொஹமத் அந்த திசை நோக்கி செல்கிறான். மரங்கள் அடர்ந்த தோட்டத்தில் தரையில் அமர்ந்து கைகளால் தடவி தடவி அந்த பறவையைத் தேடுகிறான். மெதுவாக அதை கண்டுபிடித்து மரத்தில் மிகுந்த சிரமத்துடன் ஏறி அதன் கூட்டில் அதை பத்திரமாக சேர்க்கிறான். அவனை அவன் கூட்டுக்கு அழைத்து செல்ல அவன் அப்பா வருவாரா??
இரானின் மலைப்பிரதேச கிராமத்தில் வாழ்கிறது மொஹமத்தின் குடும்பம். அம்மா இறந்து போய் வருடங்கள் ஆகிறது. இரண்டு இளைய சகோதரிகள், ஒரு பாட்டி. அவனுடைய அப்பாவின் அம்மா. வெகு நேரத்திற்கு பிறகு அவனுடைய அப்பா அவனை அழைத்துச் செல்ல வருகிறார். தாமதமாக வந்ததற்கு பள்ளி நிர்வாகத்தினர் அவரை கண்டிக்கிறார்கள். அவனுடைய அப்பாவோ அவனை இங்கேயே வைத்துக் கொள்ள முடியுமா என்று கேட்கிறார்!
விடுமுறை சமயங்களில் அவனை அங்கு வைத்துக் கொள்ள இயலாதென அவர்கள் மறுத்துவிட, விருப்பமின்றி அவனை அழைத்துச் செல்கிறார். பேருந்து பயணம் முடிந்து, குதிரையில் ஏறி மலை மேல் செல்கிறார்கள். வீடு வந்து விட்டதா என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறான் மொஹமத். ஒரு கட்டத்தில் வந்துவிட்டதாக அப்பா சொல்ல, பாட்டியின் பேரையும் தங்கைகளின் பேரையும் உரக்க கூவிக் கொண்டே வருகிறான். அத்தனை மகிழ்ச்சி. அந்த மூவரையும் அவன் சந்தித்து அவர்களை தொட்டு உணர்ந்து நெகிழ்கிறான்.
தங்கைகளின் பள்ளிக்கு ஒரு நாள் செல்கிறான். தன் ப்ரெய்லி புத்தகம் கொண்டு மற்றவர்களை விட வேகமாகவும் தெளிவாகவும் படிக்கிறான். பாட்டி தங்கைகளுடன் விளையாட்டு, துணிகளுக்கு சாயமேற்றுதல் என மகிழ்வாய் கழிகிறது நாட்கள்.
அவனுடைய அப்பாவிற்கு எதுவுமே பிடிக்கவில்லை!
மறு கல்யாணம் செய்துகொள்ள இருக்கும் அவருக்கு மொஹமெத் தேவையற்ற ஒரு சுமை. அந்த சுமையை எப்படி இறக்கி வைப்பது? அவனை தொடர்ந்து படிக்க வைக்க விருப்பமும் பணமுமில்லை. பாட்டிக்கோ மொஹமெத்தை வீட்டிலேயே வைத்துக் கொள்ள ஆசை.
ஒரு கட்டத்தில் அவனை அடுத்த ஊரில் இருக்கும் பார்க்கும் திறனற்ற தச்சனிடம் உதவியாளனாக அவனுடைய அப்பா சேர்த்துவிடுகிறார், பாட்டி இல்லாத சமயமாக பார்த்து. வீடு திரும்புகிற பாட்டி அதிர்ச்சியுறுகிறார். மனம் நொந்து வீட்டை விட்டு வெளியேற முயற்சிக்க, அவரை தடுத்து மொஹமத்தின் அப்பா கெஞ்சுகிற காட்சி – அற்புதம். உச்சியிலுருந்து மழை கொட்டோ கொட்டென கொட்ட, தன்னுடைய நிலையை கோபமும் அழுகையுமாய் மொஹமத்தின் அப்பா விவரிக்கிறார். சிறு வயதிலிருந்து வறுமையும் துயரமும் நிறைந்த வாழ்க்கையை தனக்கென இதுவரை வாழவே இல்லையென வெடிக்கிறார்.
மொஹமெத்துக்கு என்ன ஆகும்?
Color of paradise – ஒரு fairy tale! காணக் காண திகட்டாத அழகான நிலப்பரப்பில், மலைப்பிரதேசக் குளுமையில், கற்பனைக்கெட்டாத அழகழகான இடங்களில் நம்மை பதைபதைக்க வைக்கிற ஒரு படம்.
மகனுக்கும் பேரனுக்கும் இடையே சிக்கிக் கொள்கிற அந்த பாட்டியின் நிலை பரிதாபம். கிட்டதட்ட அவரின் நிலைமைக்கு நாமும் வந்து விடுகிறோம். அந்த பாட்டி அத்தனை அநாயசமாக நடித்திருக்கிறார். யார் பக்கம் தான் இருக்க வேண்டுமென்று தெரியாமல் மனம் நொந்து செத்துப் போகிறார்!
மொஹமெத்தாக வருகிற சிறுவன் நிஜமாக மாற்றுத் திறன் கொண்டவன். அவனிடமிருந்து நடிப்பை சுலபமாக வாங்கியிருக்கிறார்கள்.
படத்தின் பல காட்சிகளில் படிமங்கள் நிறைந்து இருக்கின்றன. தான் செய்வது சரியா தவறா என்று தெரியாமல், மகனை மீண்டும் வீட்டிற்கே அழைத்துக் கொண்டு அப்பா வருகிற காட்சியில் ஒரு ஆமை கல்லிடுக்கில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. ப்ரெய்லி முறையில் படிக்கத் தெரிந்த மொஹமெத் ஆற்றுப்படுகையின் கற்களில் கூட ஏதேதோ படிக்கிறான்.
மொஹமெத்தின் அப்பாவாக வருகிறவர் அசத்துகிறார். முதலில் இவரின் மேல் வெறுப்பு வந்தாலும், போகப் போக நாமும் அவரின் நிலையைக் கொஞ்சம் புரிந்துகொள்கிறோம்.
காட்டுப் பகுதியில் மகனும் அப்பாவும் செல்கிற சமயங்களில் எல்லாம் ஒரு ஓநாயின் குரல் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஓநாய்க்கு மகனை இரையாக்கி விடலாமா என்ற அபாயகரமான எண்ணமும் அப்பாவிற்கு தோன்றுகிறது. ஓநாய் இருக்கிற திசையில் மொஹமெத் செல்ல அப்படியே விட்டுவிடலாமா அது சரியா என்று அப்பா பதைபதைக்கிறார். ஒவ்வொரு முறையும் ஓநாயின் குரல் கேட்கிற போது நமக்கு அடி வயிற்றில் பயம்!
ஓவ்வொரு காட்சியிலும் கவிதை சொல்ல வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு எடுத்திருக்கிறார்கள். கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் வாளி கூட நிலவின் பிம்பத்தை மொண்டு வருகிறது.
இந்த படம் பார்த்து நாளானாலும் இன்னும் அந்த காட்சிகள் நினைவில் இருந்து கொண்டே இருக்கின்றன. அத்தனை துல்லியமான ஒளிப்பதிவு. முடுபனி மெதுவாக திரையை ஆக்கிரமிக்கிற காட்சி தொடங்கி, இறுதிக் காட்சியில் பாலம் உடைவது வரை, இந்தப் படத்தின் மொத்த வெற்றியில் ஒளிப்பதிவாளரின் பங்கு அசாத்தியம்.
விரல் நுனியில் நான் கடவுளைத் தேடிக்கொண்டே இருக்கிறேன் என்று மொஹமெத் சொல்கிறான். எல்லாப் பொருட்களையும் விரல் நுனிகளால் தான் உணர்கிறான். ஒரு நாள் நான் கடவுளையும் உணர்வேன் என்று அழுதுக்கொண்டே மொஹமெத் சொல்கிறான். அதை வைத்து பின்னப்பட்டிருக்கும் அந்த கடைசிக் காட்சி, கச்சிதம்.
நினைவில் நிற்கிற ஓவியம்.
Written by aravind
http://sirumazai.wordpress.com